×

உரிமை கோராத ரூ.39 ஆயிரம் கோடி; ஒன்றிய அரசு, ஆர்பிஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வங்கி கணக்குகள், காப்பீடுதாரர்களின் உரிமை கோரப்படாத சுமார் ரூ.39 ஆயிரம் கோடி தொடர்பாக ஆன்லைன் தகவல் தளத்தை உருவாக்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சுசிதா தலால் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகள், எல்ஐசி காப்பீடுகளில் 10 ஆண்டாக உரிமை கோரப்படாத டெபாசிட் பணம், டெபாசிட்தாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியாக ரிசர்வ் வங்கியால் சேமிக்கப்படுகிறது. இந்த நிதியத்தில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.18,381 கோடியும், 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ரூ.33,114 கோடியும், 2021 மார்ச் முடிவில் ரூ.39,264 கோடியும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பங்குகளில் முதலீடு செய்து உரிமை கோரப்படாத பணம் முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதியாக சேர்க்கப்படுகிறது. கடந்த 1999ல் ரூ.400 கோடியுடன் தொடங்கப்பட்ட முதலீட்டாளர்கள் கல்வி நிதியம் தற்போது 10 மடங்கு அதிகரித்து, 2020ம் ஆண்டில் ரூ.4,100 கோடியுடன் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட ஆன்லைன் தகவல் தளம் அமைப்பது அவசியமாகும். அதில், உரிமை கோரப்படாத கணக்குகளின் விவரங்கள், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கடைசி பரிவர்த்தனை, முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். இதன் மூலம், இறந்தவர்களின் கணக்கில் உள்ள பணத்தை அவர்களின் உண்மையான வாரிசுதாரர்கள் உரிமை கோர ஏதுவாக இருக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் நசீர், மகேஸ்வரி ஆகியோர் ஒன்றிய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் செபி உள்ளிட்ட அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்….

The post உரிமை கோராத ரூ.39 ஆயிரம் கோடி; ஒன்றிய அரசு, ஆர்பிஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Govt ,RBI ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின்...