×

‘உரிமையாளர்: பராமரித்தவர்’ சாலையில் கன்று ஈன்ற பசுவுக்கு சொந்தம் கொண்டாடிய 2 பேர்: போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலையில் கன்று ஈன்ற பசுமாட்டுக்கு உரிமை கொண்டாடிய 2 நபர்களிடம் போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கி (40). இவர் ஒரு பசுமாட்டை வளர்த்து வருகிறார். இந்த பசுமாட்டை அவர் கட்டி வளர்க்காமல் அவிழ்த்து விட்டு விடுவார். அந்த பசுமாடு சாலை ஓரங்களில் மேய்ந்துவிட்டு சாலையிலேயே படுத்துக்கொள்ளும். இதேபோல் சாலையில் இருந்த பசுமாட்டை பல நாட்கள் பார்த்து வந்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த அசோக் (45) என்பவர் அந்த பசுமாட்டுக்கு கீரை உள்ளிட்டவற்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதனால் தினசரி அந்த மாடும் அவர் வருகையை எதிர்பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. தான் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது தினசரி அந்த பசுமாட்டுக்கு தேவையான பசுந்தீவனங்களையும் அவர் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பசுமாடு அதே சாலையிலேயே கன்று ஈன்றுள்ளது. தினசரி அந்த வழியாக வந்த அசோக் அதனை பார்த்து பசு மற்றும் கன்றை வீட்டுக்கு அழைத்து சென்று அவற்றை நல்ல முறையில் பராமரித்து வந்துள்ளார். பசுமாடு, அசோக் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட விக்கி, அவரது வீட்டுக்கு சென்று பசுமாடு தன்னுடையது, அதனை ஏன் இங்கு கட்டி வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அசோக் பல நாட்களாக சாலையிலேயே இருந்த மாட்டை நான் கவனித்து வந்தேன். கன்று ஈன்றதால் அதனை நான் பராமரிக்க அழைத்து வந்தேன், என்று கூறியுள்ளார். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்கி, கன்றை மட்டும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஆரோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அசோக்கும் காவல்நிலையம் சென்று கன்றை மீட்டுத்தருமாறு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை விசாரித்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் இருவருக்கிடையே தீர்வு ஏற்படாத நிலையில் பசு மற்றும் கன்றை காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறியதால் பசுவையும் கன்றையும் காவல்நிலையத்தில் உள்ள மரத்தில் கட்டினார்கள். ஆனாலும் போலீசார் விசாரணையில் நான், சாலையில் இருந்த மாட்டை 3 மாதங்களாக பராமரித்து வந்தேன். அதனால் மாட்டை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அசோக்கும், மாட்டுக்கு நான்தான் உரிமையாளர் அதனால் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விக்கியும் மாறி மாறி உரிமை கொண்டாடினர். இருப்பினும் இன்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருவரையும் காவல்நிலையம் வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். பசுமாட்டுக்கு 2 பேர் உரிமை கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post ‘உரிமையாளர்: பராமரித்தவர்’ சாலையில் கன்று ஈன்ற பசுவுக்கு சொந்தம் கொண்டாடிய 2 பேர்: போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Vilappuram ,Police Station ,
× RELATED கருப்படிதட்டடை ஊராட்சியில் மாட்டு...