×

உணவே மருந்து என்ற மந்திரத்தின் ரகசியம்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. இங்கிருந்துதான் நாகரிகமும், உணவு கலாச்சாரமும் உலகம் முழுக்க பரவியது. உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு போன்றவை தமிழர்களின் வாழ்வியல் முறையில் ஒன்றாக கலந்திருந்தது. உணவு சார்ந்த மிகப் பெரிய ஆய்வுகள் தமிழர்களுடைய சங்க கால இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை போன்றவற்றில் நாம் கண் கூடாகப் பார்க்கலாம். ;சித்தர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற கோட்பாட்டின்படி வாழ்ந்து வந்தவர்கள். பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் நாம் அருந்தக்கூடிய தண்ணீரின் குணங்கள், எவ்வகை தண்ணீருக்கு என்னென்ன குணங்கள் உள்ளன, நாம் அருந்தக்கூடிய பாலின் குணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியில் எத்தனை வகைகள் உள்ளன என ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி கூறியுள்ளது. பழந்தமிழர்கள் சிறுதானிய உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் மிக பிரதானமாக வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்றவைகளை உண்டு நோய் நொடிகளற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்துள்ளனர். அதேபோல் நம் உணவில் அறுசுவைகளும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் பெரும்பாலும் துவர்ப்பு, கார்ப்பு போன்றவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பு சுவை தசை வளர்ச்சி, உடல் பலத்தை பெருக்குகிறது. புளிப்பு சுவை கொழுப்பை வளர்க்கும். உப்பு சுவை எலும்புகளுக்கு வலுவைத் தருவதோடு, வியர்வையைப் பெருக்கி நஞ்சினை வெளிப்படுத்தும். கசப்பு சுவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் ஆற்றல் உடையது. காரம் உமிழ்நீரை சுரக்க வைக்கும் ஆற்றலுடையது. மேலும் அது சீரணமாக்கும் ஆற்றலுடையது. துவர்ப்பு சுவை குருதியை உண்டாக்குவதோடு குருதியை சுத்தப்படுத்தும். தோலுக்கு பொலிவைக் கொடுக்கும்.; நம் தமிழர் மரபுப்படி அதிகமாக பயன்படுத்தப்பட்ட உணவுகளில் மிக முக்கியமானவை எள்ளு சோறு, கொள்ளு சோறு, கடுகு சோறு போன்றவையே. மேலும் உளுந்தங் களி, கேழ்வரகு களி, கோதுமை களி, வெந்தயக் களி போன்றவையும் இடம்பெற்றன. இதுபோல் பல்வேறு ரகசியங்கள் பொதிந்திருந்ததால்தான் உணவே மருந்து என்று மந்திரம் சொன்னார்கள். அந்த பண்டைய உணவு முறையை மீண்டும் நாம் பின் தொடர்ந்தால் நோயின்றி நூறாண்டு வாழ முடியும்!;

The post உணவே மருந்து என்ற மந்திரத்தின் ரகசியம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED படிகாரத்தின் மருத்துவ குணங்கள்