×

உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்பு… விமான நிலையத்திற்கே சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை :  உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பியுள்ளனர்.அவர்களை சென்னை விமான நிலையத்திற்கே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும், தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை அழைத்து வர எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, எம்.பி.,க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. இக்குழு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசி, தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இதன்படி, தினமும் உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தமிழக மாணவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கடைசி குழுவினரும் தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது போர் தொடங்கியதில் இருந்து கடைசி வரை தமிழக அரசு அதிகாரிகள் தங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் முதல்வரின் நடவடிக்கையால் தான் தற்போது தமிழ்நாட்டிற்கு திரும்ப முடிந்ததாகவும் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். உக்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1921 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களில் தமிழ்நாடு அரசு ஏற்பாட்டின் பேரில் 1524 மாணவர்களும் சொந்த செலவில் 366 மாணவர்களும் தமிழகம் திரும்பியுள்ளனர். 31 மாணவர்கள் மட்டும் உக்ரைனிலேயே தங்கி இருக்க விருப்பம் தெரிவித்துவிட்டனர். எனவே நாடு திரும்ப விரும்பிய அனைத்து மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களின் எதிர்கால கல்வி தொடர்பாக முதல்வர் ஆய்வு நடத்தி வருவதாகவும் விரைவில் நல்ல முதல்வர் அறிவிப்பார் என்றும் சிறப்பு குழுவின் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்…

The post உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்பு… விமான நிலையத்திற்கே சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ukraine ,Chief Minister ,Stalin ,Chennai ,Chennai airport ,
× RELATED ‘தமிழ்நாடு நாள்’ கட்டுரை, பேச்சு போட்டிக்கு அழைப்பு