×

இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர் கார் ஜப்தி முயற்சி அதிகாரிகள் சமசரம் மின்வாரிய அலுவலகத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு

வேலூர், அக்.13: மின்வாரிய அலுவலகத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காதாதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் கலெக்டர் காரை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா இளையநல்லூர் அருகே குப்பிரெட்டிதாங்கல் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு மின்வாரியத்துக்காக பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அருணா, பாபு, கோபி உள்ளிட்ட நிலத்தின் உரிமையாளர்களான 19 பேர் தாங்கள் வழங்கிய சுமார் 35 ஏக்கர் நிலத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்று, அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஒரு சென்டுக்கு ₹5 ஆயிரம், 30 சதவீதம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு அளித்தனர். அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இருந்ததால் கலெக்டர், உதவி கலெக்டர், மின்வாரிய அதிகாரிகள் என 6 அரசு கார்கள் மற்றும் அலுவலகப் பொருட்களையும் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது ஜப்தி செய்ய வந்தபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நீதிமன்ற அமீனா மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் வழக்கறிஞருடன் வந்து வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் காரை ஜப்தி செய்து, அதில் நோட்டீஸ் ஒட்டினர்.
தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அதற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதை அடுத்து ஜப்தி கைவிடப்பட்டு கலெக்டரின் கார் விடுவிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post இழப்பீடு வழங்காததால் வேலூர் கலெக்டர் கார் ஜப்தி முயற்சி அதிகாரிகள் சமசரம் மின்வாரிய அலுவலகத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Samasaram ,board ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...