×

இளம்பெண்ணை கொன்று கை, கால்களை கட்டி கிணற்றில் வீச்சு: மாயமான கணவனுக்கு வலை

ஆற்காடு: ஆற்காடு அருகே காணாமல் போனதாக கூறப்பட்ட இளம்பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். மாயமான அப்பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமு(40). இவரது மனைவி சரிதா (27). இருவரும் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கு பெரிய தெருவில் தங்கி, அங்குள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தனது மனைவி சரிதா காணாமல் போனதாக ராமு கடந்த மாதம் 25ம்தேதி ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதாவை தேடி வந்தனர். நேற்று மாலை ராமு வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் ஒரு மூட்டை மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து மூட்டையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதை திறந்து பார்த்தபோது மாயமான சரிதா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்த ராமு, அன்று முதலே தலைமறைவானது தெரிய வந்தது. எனவே ராமுவே, மனைவியை கொன்று மூட்டை கட்டி கிணற்றில் வீசியிருக்கலாம். பின்னர் மனைவி காணாமல் போனதாக புகார் கொடுத்து நாடகமாடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமுவை பிடித்து விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள ராமுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post இளம்பெண்ணை கொன்று கை, கால்களை கட்டி கிணற்றில் வீச்சு: மாயமான கணவனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Artgad ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது