×

இலை கட்சியில் சீனியர்களை ஓரங்கட்ட ஜூனியர்கள் எடுத்துள்ள புது தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சீனியர்கள் அரசியலில் இருந்து விலகினால், நாம பெரிய பதவிக்கு வந்துவிடலாம் என்று ஸ்கெட்ச் போட்டு களமாடிவரும் ஜூனியர் இலை கட்சியினர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் இலை கட்சியில் ஜூனியர் நிர்வாகிகளுக்கும், சீனியர் நிர்வாகிகளுக்கும் இடையே பெரும் போராட்டமே நடக்கிறதாம். இதில் தேனி கோஷ்டி கிடைத்த பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு நான் இலை கட்சியில் இந்த பதவியில் இருக்கிறேன் என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக பொது இடங்களில் தங்களை தாங்களே பப்ளிசிட்டி செய்து கொண்டு இருக்கிறார்கள்.அதே சமயம், தேனிக்காரரின் எதிர்கோஷ்டியில் இருக்கும் ஜூனியர்கள் எத்தனை காலம் தான் சீனியர்களுக்கு காவடி தூக்குவது. இந்த சந்தர்ப்பத்தைவிட்டால், இலை கட்சியில் மேலுக்கு வர முடியாது. எனவே, சீனியர்களை நம்ம கோஷ்டியில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும் என்று ஒன்று கூடி பேசி வர்றாங்க. இதுல சிலர் ஒரு படி மேலே போன சில ஆர்வக் கோளாறு ஜூனியர் இலை கட்சி அரசியல்வாதிகள், சீனியர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். குறிப்பாக, இலை கட்சியின் சீனியர் அரசியல்வாதிகள் பற்றி ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகைக்கு பெட்டிஷனாக தட்டிவிட்டு கொண்டு இருக்கிறார்களாம். அதில் ஏகப்பட்ட புகார்களை குறிப்பிட்டு ஆதாரத்துடன் இணைத்துள்ளார்களாம். இவர்கள் வயதானவர்கள், இவர்கள் கட்சி பணியில் களம் இறங்கி செய்ய மாட்டாங்க. இவர்களை கட்சியில் வைத்து கொண்டால், 2024 தேர்தலில் வெயிலூர் மாவட்டத்தில் ஒரு சீட் கூட கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார்களாம். வில்லங்கமான இலை கட்சியின் ஜூனியர் அரசியல்வாதிகள், எந்த இலை கட்சி சீனியர் மணல் திருடுகிறார்.. யார் லாட்டரி சீட்டு நடத்துகிறார்.. யார் கட்டபஞ்சாயத்து செய்கிறார்… யார் கந்துவட்டி விடுகிறார். யார் ஏமாற்று பேர் வழி, நில மாபியா என்று பட்டியல் போட்டு அமைச்சர்கள், துறை செயலாளர்கள், ஒவ்வொருத்தரோட தகிடு தத்தங்களையும் ஆதாரத்தோட எடுத்து ஆளுங்கட்சியின் நிர்வாகிகளுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் தட்டி விடறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் கரன்சியை கறக்கறாங்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் உள்ளனர். இந்நிலையில், கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிறை வாசலில் உள்ள காக்கிகள் சிலர்,“ விட்டமின் ப” கறந்து வருகிறார்களாம். கைதிகளின் உறவினர்களிடம், ரூ.100 முதல் ரூ.500 வரை காக்கிகள் வசூலிக்கிறார்களாம். சமீபத்தில் “ சிறையில் உள்ளவரை பார்க்க சில நண்பர்கள் சென்றுள்ளனர். அவர்களிடம், “விட்டமின் ப” வாங்கிக் கொண்டு வழக்கம்போல் உள்ளே விட்டாங்க. வெளியே வந்த அவர்களிடம், “அங்கிருந்த காக்கி ஒருவர், “குவார்ட்டர் பாட்டில் வாங்கி கேட்டாராம். குவர்ட்டர் பாட்டில் வாங்கி, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலரில் வைத்தார்களாம். வசூலில் கொழித்து வரும் காக்கிகள் குறித்த தகவல்கள்,“ சிறை அதிகாரிக்கு சென்றுள்ளதாம்… விரைவில் அதிரடி நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்… இதை பொறுத்து இருந்து தான் பார்க்க ேவண்டும்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ரப்பர் போல இழுக்காமல் சொல்லுங்க ரப்பர் கழக தலைவராக யாரு வரப்போறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அரசு ரப்பர் கழகத்தில் முதிர்ந்த மரங்களை முறித்து அப்புறப்படுத்த டென்டர் தொடர்பாக ஒப்பந்தாரர்களை அழைத்து அரசு விலையை குறிப்பிட்டு ஒரு மரத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று ரேட் பேசுவது, தனக்கு கமிஷனாக கிடைக்கும் பணத்திற்கு ஜிஎஸ்டி 12 சதவீதம் போட்டுத்தர வேண்டும் என்பது, ஜிஎஸ்டி செலுத்தாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசு ரப்பர் கழக உயர் அதிகாரி ஒருவர் பேசியது சர்ச்சை ஆகியிருந்தது. இதனை தொடர்ந்து உயர் அதிகாரி திடீரென விடுப்பில் சென்றுவிட்டாராம். அடுத்து அவரே வருவாரா அல்லது வேறு அதிகாரி நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியுடன் அரசு ரப்பர் கழக தொழிற்சங்கத்தினர் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ புரமோஷன் பயிற்சியை தடுக்கும் நபர் யாரு, எந்த துறை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக காவல்துறையில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் பலரும் உதவி ஆணையர்களாக ஆகிவிட்ட நிலையில், தற்போது உள்ள எஞ்சிய 239 பேர் அனைவருக்கும் இன்று முதல் உதவி ஆணையருக்கான பயிற்சி நடைபெற உள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள 34 இன்ஸ்பெக்டர்களின் 17 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதி 17 பேர் விடுவிக்கப்படவில்லை. அவர்களெல்லாம் பயிற்சி முடிந்து வந்த பின்னர் நீங்கள் செல்லுங்கள் என்ற ரீதியில் 17 பேரை மட்டும் நிறுத்தி வைத்துள்ளனர். பல ஆண்டுகள் தாமதமான நிலையில், தற்போது ஆர்டர் வந்தும் எங்களை அனுப்ப மறுக்கின்றனர் என இன்ஸ்பெக்டர்கள் மன உளைச்சலில் உள்ளார்களாம். இந்த, பயிற்சியையும் விட்டால் மீண்டும் எப்போது பயிற்சி வைப்பார்கள் என தெரியவில்லை எனவும், இதனால் மீண்டும் உதவி ஆணையருக்கான வாய்ப்பு கைநழுவி போய்விடுமோ எனவும் சிலர் ஆதங்கப்படுகிறார்களாம். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி பயிற்சியில் மீதமுள்ள இன்ஸ்பெக்டர்களையும் கலந்துகொள்ள வைப்பார்களா என வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post இலை கட்சியில் சீனியர்களை ஓரங்கட்ட ஜூனியர்கள் எடுத்துள்ள புது தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Yananda ,Junior Leaf Party ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...