×

இலவசம் அவசியம்

‘இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை. இதனால் நாட்டில் புதிய சாலைகள், புதிய விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை’ என பிரதமர் மோடி பேசியிருந்தார். இதையடுத்து இலவசம் அவசியம்தானா என்றொரு பேச்சு பரவலாக நிலவி வருகிறது. மாநிலங்களும் இதுதொடர்பாக பரிசீலிக்கவும் கோரப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார மேம்பாடு, போக்குவரத்து வசதிகள் மிகவும் முக்கியமானவை தான். மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதை விட மிக முக்கியம் மக்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரம். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சத்துணவுத்திட்டத்தை பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில், கடந்த 30 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் படித்து, சத்துணவு உண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதாகவும், சராசரி உயரம் கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல… பிளஸ் 1 படிக்கும் மாணவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அதாவது சுமார் 6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிராமங்களில் போதிய போக்குவரத்து வசதியில்லாத ஊர்களிலிருந்து பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் ஒரு வரப்பிரசாதமே. சத்துணவு, இலவச சைக்கிள், இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் கல்வியறிவுமிக்க மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்வி இடைநிற்றல் போன்ற பிரச்னைகளும் குறைந்துள்ளது. திமுக ஆட்சியின்போதுதான் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட  திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதாவால் இதற்கும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 22.30 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010-2020 ஆகிய 10 ஆண்டுகளில், சுமார் பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் சாகுபடி செய்யப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஆண்டுதோறும் விவசாய சாகுபடி குறைந்து வரும் சூழலில், இலவச மின்சார  திட்டங்களும் ரத்தானால், நிலைமை மேலும் கவலைக்கிடமாகும்.திமுக ஆட்சியில் இலவச கலர் டிவி வீடுகள் தோறும் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருந்தன. பொழுதுபோக்கு, நாட்டு நடப்புகளை அனைவரும் தெரிந்து கொள்ளவும் இது உதவியது. மேலும், கடந்தாண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாமென அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு பணி நிமித்தம் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக வரும் ஏழைப்பெண்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். எனவே, இலவசங்களை ஒருபோதும் தேர்தல் கால வாக்குறுதியாக கருதக்கூடாது. அவைகள் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொக்கிஷம் என்பதை ஒன்றிய அரசானது கருத்தில் கொள்ள வேண்டும்….

The post இலவசம் அவசியம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…