×

பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்திய விவகாரம் எஸ்வி சேகரை கைது செய்யாதது ஏன்?: போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.ேசகர் தாக்கல் செய்த முன்ஜாமீன்  மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில்  பதிவிட்டதாக எஸ்வி சேகர் மீது பெண் கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்  வழக்கு பதிவு  செய்யப்பட்டது.  இந்த வழக்கில் எஸ்வி சேகர் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற  நீதிபதி ஜெகதீஸ் சந்திரா விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து, எஸ்வி சேகர் முன்ஜாமீன் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராமதிலகம் முன்னிலையில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்போது, எஸ்வி சேகர் தரப்பில் வக்கீல் ரகுநாதன், மயிலை சத்யா ஆகியோர் ஆஜராகி, எஸ்வி சேகர் தான் பதிவிட்டதை உடனடியாக நீக்கிவிட்டார்.  அவருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரரின் தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என்றனர்.இதற்கு முன்ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்வி சேகர் வீட்டின் முன்  ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், எஸ்வி சேகரை போலீசார் கைது செய்யவில்லை. எஸ்வி சேகர் ஒட்டுமொத்த  பெண்களையும் இழிவு படுத்தியுள்ளார். அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் அவர் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று நீதிபதியிடம் கூறினர்.இதைக்கேட்ட நீதிபதி, சட்டம் அனைவருக்கும் சமம். சாதாரண மக்கள் மீது நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் போலீசார் மனுதாரர் விஷயத்தில்  மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்காமல்  பாரபட்சம் காட்டுகிறது என்றார்.

அப்போது, எஸ்வி சேகர் தரப்பு வக்கீல், பெண் கொடுமை தொடர்பான பிரிவு தவறாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகள் ஜாமீன் வழங்கப்பட  வேண்டிய பிரிவுகள்தான் என்று வாதிட்டார்.இதற்கு பெண் வக்கீல்கள் சங்க செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, வக்கீல்கள் டி.பிரசன்னா, சுதா, தாரா உள்ளிட்டோர் ஆஜராகி, பெண்களுக்கு  எதிரான செயலைச் செய்துள்ள எஸ்வி சேகர் தானே தவறை ஒப்புக்கொண்டுள்ளார். பெண்களுக்கு எதிராக அவர் இழிவான கருத்துக்களை  வெளியிட்டுள்ளதால்தான் பெண் கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு ெசய்யப்பட்டுள்ளது. அவரின் செயல் அநாகரிகமானது.  பத்திரிகையாளர்கள் மீது நள்ளிரவில் நடவடிக்கை எடுத்த போலீசார் எஸ்வி சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.இதைக்கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags :
× RELATED அனைத்து வகைகளிலும் வடகிழக்கு...