இறால் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையையொட்டி கொண்டமாநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொழிற்சாலையில் தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகேயுள்ள மாந்தோப்பு மற்றும் காலி இடத்தில் விடப்பட்டு வந்தது. இதனால் விவசாயமும், நிலத்தடிநீர் மாசுப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த வாரமாக நச்சுத்தன்மையுள்ள இறால் கழிவுகளை சாலையோரத்தில் விடுவதாகவும், லாரிகளில் கொண்டமாநல்லூர் வழியாக இறால்களை கொண்டு செல்வதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை என்றும், டெங்கு காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட 5க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டமும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இதனால் மாசு கட்டுப்பட்டு வாரியம் உதவியோடு தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்ததும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், தொழிற்சாலை முழுவதும் ஆய்வு செய்தார்.அப்போது தொழிற்சாலையில் பணி எதுவும் நடக்கவில்லை. இறால் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலை பூங்காவில் விடப்படுவதாக நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தபோது கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதையறிந்த எம்பி ஜெயக்குமார், தொழிற்சாலை இயங்க தடைவிதித்துள்ளதாக பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்….

The post இறால் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: