×

இன்று புதிய பிரதமர் பதவியேற்கும் நிலையில் பாக். ராணுவம், எதிர்கட்சிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் : லண்டனில் நவாஸ்-இம்ரான் ஆதரவாளர்கள் மோதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று புதிய பிரதமர் பதவியேற்க உள்ள நிலையில் நேற்றிரவு ராணுவத்திற்கும், எதிர்கட்சிகளுக்கும் எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதேபோல் லண்டனில் நவாஸ் ஷெரீப் – இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானில்  எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில்  இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தற்போது பாகிஸ்தானில் புதிய அரசு  அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. புதிய பிரமதரை தேர்வு செய்வது  தொடர்பான எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த  எதிர்கட்சிகளின் சார்பில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளர் மற்றும் அமைச்சர்கள்  பதவியேற்க உள்ளனர். புதிய பிரதமர் பதவியேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றிரவு முதல் இம்ரான் கான் கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியினர் நாட்டின் பல நகரங்களில் மாபெரும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் இம்ரான் கானுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர் உள்ளிட்ட நகரங்களில் இம்ரான் கானுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, புதிய சுதந்திர போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்த இம்ரான் கான், வெளிநாட்டு சக்திகள் மூலம் ஆட்சி, அதிகாரம் பறிபோவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். மேலும், நாட்டு மக்கள் தங்கள் ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பதாகவும், வெளிநாட்டினரை பயன்படுத்தி நாட்டை நடத்துவதில்லை என்றும் அவர் கூறினார். கராச்சியில் நேற்றிரவு இம்ரான் கானுக்கு ஆதரவாக ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இஸ்லாமாபாத்தில் உள்ள ஜீரோ பாயிண்டில் இம்ரான் ஆதரவாளர்கள் ஒன்று கூடி, பாகிஸ்தானின் கொடியை அசைத்து இம்ரானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் நகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து இம்ரான் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், ‘இந்த போராட்டத்திற்கு இம்ரான் கான் தலைமை தாங்கவில்லை என்றால், அது நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் செய்யும் துரோகம் செய்த செயலாகும்’ என்றார். இந்நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் போர் லண்டனில் எதிரொலித்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது நவாஸ் கட்சி ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ​​இம்ரானின் ஆதரவாளர்கள் சிலர், நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சிக்கு எதிராக குரல்களை எழுப்பினர். நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் சிலர், இம்ரான் கானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மோடியின் ‘சவுகிதார்’ முழக்கம் கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘சவுகிதார்’ (காவலன்) என்று பதிவிட்டிருந்தார். தன் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார் நரேந்திர மோடி’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘நாட்டின் காவலாளி திருடன்’ என்று பதிவிட்டிருந்தார். இந்திய தேர்தலில் இந்த வாசகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இந்த சவுகிதார் வார்த்தை பாகிஸ்தானில் எதிரொலித்தது. அதாவது, இம்ரான் கான் கட்சியின் நிர்வாகி ஷேக் ரஷித் நேற்று ராவல்பிண்டியில் நடந்த பேரணியில் உரையாற்றிய போது, ‘சவுகிதார் சோர் ஹை’ (நாட்டின் காவலாளி திருடன்) என்ற கோஷங்களை எழுப்பினார். இந்த கோஷங்கள் யாவும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானவை என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப்  பிறகு, இது போன்ற (சவுகிதார்) கோஷங்களை எழுப்ப வேண்டாம்  என்றும், ராணுவத்திற்கு எதிராக பேசவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதால், பொதுமக்களும் அமைதியாக இருந்தனர். இம்ரான் கானை பதவியில் இருந்து தூக்கியதின் பின்னணியில் பாகிஸ்தானின் ராணுவமும், ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வாவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘குற்றவாளிகள் தலைமையிலான இறக்குமதி செய்யப்பட்ட அரசை எதிர்க்கும் வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் கூட்டம்’ என்று பதிவிட்டிருந்தார். …

The post இன்று புதிய பிரதமர் பதவியேற்கும் நிலையில் பாக். ராணுவம், எதிர்கட்சிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் : லண்டனில் நவாஸ்-இம்ரான் ஆதரவாளர்கள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Bach ,Nawas ,Imran ,London ,Islamabad ,Pakistan ,Dinakaran ,
× RELATED இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தல்