×

இன்னிங்ஸ், 117 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம்: டெஸ்ட் தொடரை சமன் செய்தது நியூசிலாந்து

கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.  மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச, நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் லாதம் 252 ரன், கான்வே 109 ரன், யங் 54, ராஸ் டெய்லர் 28, பிளெண்டல் 57* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் வெறும் 126 ரன் மட்டுமே எடுத்து  ஆல் அவுட்டானது. யாசிர் அலி  55 ரன், நூருல் ஹசன் 41 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (2 பேர் டக் அவுட்). நியூசி. பந்துவீச்சில் போல்ட் 5, சவுத்தீ 3, ஜேமிசன் 2 விக்கெட் கைப்பற்றினர். நியூசி. முதல் இன்னிங்சில் 395 ரன் முன்னிலை பெற்ற நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3வது நாளான நேற்று  நியூசி 2வது இன்னிங்சை தொடங்காமல், வங்கதேசத்துக்கு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. கடும் நெருக்கடியுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 79.3 ஓவரில் 278 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஷத்மன் 21, முகமது நயிம் 24, நஜ்மல் 29, கேப்டன் மோமினுல் 37, நூருல் 36 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் சதம் விளாசினார். அவர் 102 (114 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியாக களத்தில் தஷ்கின், எபாதத் இருந்தபோது… இந்த போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் ராஸ் டெய்லருக்கு ஓவர் தரப்பட்டது. 3வது பந்தில் எபாதத்தை ஆட்டமிழக்க செய்த டெய்லர் ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் சக வீரர்களின் வாழ்த்துக்களுடன் விடை பெற்றார். ஜேமிசன் 4, வாக்னர் 3, சவுத்தீ, மிட்செல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னிங்ஸ் மற்றும் 117 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசி. 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இரட்டை சதம் விளாசிய லாதம் ஆட்ட நாயகன் விருதும், 2 டெஸ்டிலும் சதம் அடித்த கான்வே  தொடர் நாயகன் விருதும் பெற்றனர். …

The post இன்னிங்ஸ், 117 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம்: டெஸ்ட் தொடரை சமன் செய்தது நியூசிலாந்து appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,New Zealand ,Christchurch ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்