×

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலைய செய்யும்: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ அரசு மேற்கொண்டு இருக்கும் இந்திய ஆட்சிப்பணி விதி 6ன் திருத்தங்கள், முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை மாநில அரசுகளின் மீது திணிக்கும் முயற்சியாகும். இது, மாநில சுயாட்சிக்கு எதிரானது. ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழலுக்கு இந்த திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அரசுகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றிய அரசு, இந்திய ஆட்சிப்பணிகள் விதிகள் திருத்தம் குறித்த கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. மாநில அரசுகளை நகராட்சிகளைப்போல கருதி நசுக்கி வரும் ஒன்றிய பாஜ அரசு டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு, ஆட்டிப்படைத்து ஆதிக்கம் செய்ய நினைப்பது மக்களாட்சி தத்துவத்தின் மாண்பை செல்லரிக்கச் செய்துவிடும். இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களாக ஆட்சிப்பணி தேர்வு எழுதாமல், வெளியாட்களையும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களையும் நியமிக்கலாம் என்பதை நடைமுறைப்படுத்தி, ஆட்சிப்பணி முறைமையை சீர்குலைத்துவிட்டது பாஜ அரசு. தற்போது விதிகளில் திருத்தம் கொண்டு வந்து மாநில அரசுகளை கிள்ளுக் கீரையாக கருதி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை விருப்பம்போல பந்தாடலாம் என்று முடிவெடுத்து இருப்பது அரசுப்பணி நிர்வாகத்தையே நிலைகுலையச் செய்துவிடும். எனவே ஒன்றிய பாஜ அரசு இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் அரசுப்பணி நிர்வாகத்தை நிலைகுலைய செய்யும்: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Civil Service ,Vigo ,Union Govt. ,Chennai ,Madhyamik ,General Secretary ,Vaiko ,Union BJP Government ,
× RELATED இந்திய குடிமைப்பணி தேர்விற்கு இலவச...