×

இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களைய வேண்டும்

திருவாரூர், ஆக. 7: இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாருர் நகர மற்றும் வட்டார கிளையின் சார்பில் ஐம்பெரும் விழா திருவாரூரில் நேற்று வட்டார தலைவர் அய்யப்பன் தலைமையிலும், மாவட்ட துணை தலைவர் சத்யநாராயணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கிருபாராணி, நகர செயலாளர் நாகராஜன், வட்டார பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. வட்டார செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார்.

இதில் மாநில பொது செயலாளர் ரெங்கராஜன், மாநில தலைவர் லெட்சுமிநாராயணன், மாவட்ட செயலாளர் ஈவேரா, மாவட்டத் தலைவர் முருகேசன், மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, பொதுகுழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், தமிழ்வாணன், செல்வமணி, முன்னாள் பொதுகுழு உறுப்பினர் ஜோன்ஸ் ஜன்ஸ்டீன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில், பட்டதாரி ஆசிரியர் தலைமை ஆசிரியர் பணியிடங்களில் பணி முன்னுரிமையின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள யூகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கூடுதல் விவரம் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் மீது சுமத்தாமல் இதற்கென தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும், கற்பித்தல் பணி பாதிக்காமல் இருப்பதற்கு ஆசிரியர்களை மாற்று பணியில் ஈடுபடுத்தக் கூடாது, இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பொது செயலாளர் ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
வரும் 25ம் தேதி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்தவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. அதேநேரத்தில், கற்பித்தல் பணி பாதிக்கப்படும் என்பதால் ஆசிரியர்களை இதில் ஈடுப்படுத்த கூடாது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் சத்துணவு திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என மாபெரும் போராட்டம் நடத்தி விடுவிக்கப்பட்டோம்.எனவே அந்த அடிப்படையில் ஆசிரியர்களை காலை உணவு திட்டத்தில் ஈடுப்படுத்த வேண்டாம்.

நாடாளுமன்றத்தில் கடந்த 2003ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தினமான அடுத்த மாதம் 5ம் தேதி ரதயாத்திரையானது துவங்கப்பட்டு உலக ஆசிரியர் தினமான அக்டோபர் மாதம் 5ம் தேதி டெல்லியில் மாபெரும் மாநாடு நடத்தப்படவுள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.

The post இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களைய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள்...