×

ஆவணங்களை மறைத்து இடைக்கால தடை பெற்ற விவகாரம் குடியிருப்போர் சங்க உறுப்பினர்களுக்கு ₹1.19 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

சென்னை, ஜூலை 9: ஆவணங்களை மறைத்து இடைக்கால தடையை பெற்ற குடியிருப்போர் சங்க உறுப்பினர்களுக்கு ₹1.19 லட்சம் அபாரதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுசேரி அடுத்த ஏகாட்டூரில் உள்ள ஹீராநந்தனி குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மும்பையை சேர்ந்த ஹீராநந்தினி கட்டுமான நிறுவனம், சிறுசேரி அருகே உள்ள ஏகாட்டூரில் 120 ஏக்கர் நிலத்தில் 2 அலகுகளில் 14 அடுக்குமாடி கோபுரங்களை கட்ட ஒப்புதல் பெற்றது. இங்கு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஓட்டல்கள், கிளப் ஹவுஸ் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் அலகில் 2014ம் ஆண்டு 7 அடுக்குமாடி கோபுரங்களை கட்டி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, 2 கட்டமாக 7 அடுக்குமாடி கோபுரங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அங்கு கிளப் ஹவுஸ் கட்டவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 2 கட்டுமான கோபுரங்களை கட்டப்பட உள்ளன.

இதற்காக கட்டிட திட்ட அனுமதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நகர ஊரமைப்பு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கட்டிட திட்டம் மாற்றி அமைக்கும் முன்பு ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ள எங்களிடம் தனித்தனியாக ஒப்புதல் பெற்றாமல் கிளப் ஹவுஸ் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி கோபுரங்களை கட்டியுள்ளனர். எனவே, இந்த கட்டிடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்தான் விசாரிக்க முடியும். உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்ற கட்டுமான நிறுவனத்தின் வாதத்தை ஏற்க முடியாது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் வசதிகளை செய்துக் கொடுக்காதபட்சத்தில்தான் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடர முடியும். இந்த வழக்கு கட்டிட திட்ட அனுமதி மாற்றியது தொடர்பான என்பதால் உயர் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது.

கட்டிட திட்ட அனுமதியை மாற்றி, நகர ஊரமைப்பு இயக்குனரகத்தில் கட்டுமான நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஒப்புதல் பெற்றுள்ளது. பின்னர், இந்த விவரங்களை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதை மறைத்து மனுதாரர் சங்கம், இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளது. அதனால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. வழக்கில் முக்கிய ஆவணங்களை மறைத்து, தடை உத்தரவு பெற்றுள்ளதால், மனுதாரர் சங்கத்துக்கு வழக்கு செலவு விதிக்கப்படுகிறது. சங்கத்தில் உள்ள 239 உறுப்பினர்களுக்கு தலா ₹500 வீதம், 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 8 வாரத்திற்குள் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். சங்கத்தில் உள்ள 239 உறுப்பினர்களுக்கு தலா ₹500 வீதம், 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

The post ஆவணங்களை மறைத்து இடைக்கால தடை பெற்ற விவகாரம் குடியிருப்போர் சங்க உறுப்பினர்களுக்கு ₹1.19 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,
× RELATED திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல்...