×

ஆவடி மாநகராட்சி பகுதியில் பயன்பாடில்லாமல் கிடக்கும் நம்ம டாய்லெட்: பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் பயன்பாடில்லாமல் கிடக்கும் நம்ம டாய்லெட்டை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டிற்கு முக்கிய காரணமாக விளங்குவது கழிவறைகள் இல்லாதது தான் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் எதிரொலியாக ஒன்றிய அரசு மூலம் தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த துாய்மை பாரதம் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இத் திட்டத்தில், கழிவறை இல்லாத வீடுகள் மற்றும் பொது இடங்களில் கழிவறை கட்டிக் கொள்ள ஒன்றிய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அருகில் தூய்மை இந்தியா என்ற இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட செப்டிக் டேங்க், தண்ணீர் டேங்க் தற்போது சேதமடைந்து மின்சார வசதி இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. இதேபோல், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தனியார் வாகனங்களால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பறை இருப்பதே தெரியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் இந்த கழிப்பறை அருகே சமூக விரோதிகள் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாற்றுகின்றனர்.மேலும் ஆவடி மார்க்கெட், ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம், ஆவடி துணை ஆணையர் அலுவலகம், வணிக வளாகங்கள், நிறைந்த இடத்தில் ஆண்கள் கழிவறை 3, பெண்கள் கழிவறை 3 என 6 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் தான் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் தரம் உயர்த்தப்பட்ட ஆவடி மாநகராட்சியும் உள்ளது. எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post ஆவடி மாநகராட்சி பகுதியில் பயன்பாடில்லாமல் கிடக்கும் நம்ம டாய்லெட்: பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Awadi Municipal Area ,Awadi ,Awadi Corporation ,Namma ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர்...