×

ஆரம்ப கட்டத்தை எட்டியது கொரோனா 3வது அலை.. இந்தியாவில் 230 வகையான வைரஸ் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி:உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் போதாது என்று யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 230 வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ‘இன்சாகாக்’ தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 18.96 கோடியை கடந்த நிலையில், பலி எண்ணிக்கை 4,082,510 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலை அதன் ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் ட்ரெட்ரோஸ் ஜெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐரோப்பா, வட அமெரிக்காவில் தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டு வருவதால், தொற்று பரவல் குறைந்துள்ளது.உலகளவில் நான்காவது வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டதிட்ட 10 வாரங்கள் பின்னர் தற்போது இரண்டாவது முறையாக மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. உருமாறிய டெல்டா வைரஸ், இப்போது 111க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இது உலகம் முழுவதும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. உருமாறிய ஆல்பா வைரஸ் 178 நாடுகளிலும், பீட்டா வைரஸ் 123 நாடுகளிலும், காமா 75 நாடுகளிலும் பரவியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.மேலும், மரபணு வரிசைமுறையை கண்காணித்து வரும் இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு (‘இன்சாகாக்’) வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவில் இதுவரை 230 வகையான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய தொற்றுகள் யாவும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. சில உருமாறிய தொற்றுகள்தான் ஆபத்தானவை. கடந்த சில மாதங்களாக உருமாறிய வைரசின் 2 வகை டெல்டா வகைகள் கண்டறியப்பட்டன. ஆனால், தற்போது ‘ஏஒய்3’ என்ற மற்றொரு உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.டெல்டா வைரசின் மூன்று வகைகளும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஏஒய்3’ வைரஸ் தொற்றின் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் கூட, விஞ்ஞானிகள் குழு அதை கண்காணித்து வருகிறது. டெல்டாவின் மூன்றாவது வகை வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 43.80 கோடி பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த 230 வைரஸ்களில் 14  வகையான வைரஸ்கள் கடுமையான பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. எட்டு வகைகள் கவலைக்குரிய பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. ஏற்கனவே, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகளை ஒன்றிய அரசு ஆபத்தான வைரஸ் பட்டியலில்  சேர்த்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் தன்வி குப்தா ஜெயின் வெளியிட்ட தகவலில், ‘இந்தியாவில் பல மாநிலங்கள் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்தி உள்ளன. இதனால், மக்கள் கூட்டம் பரவலாக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது அலையின் அபாயத்தை அதிகரித்து வருகிறது. அதேநேரம், தடுப்பூசி போடும் வேகம் தீவிரப்படுத்தவில்லை. இந்தியாவில் தினமும் சராசரியாக 40 லட்சம் டோஸ் வழங்கப்பட்டது.தற்போது, ​​இந்த எண்ணிக்கை 34 லட்சமாக குறைந்துள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இப்போது 45 சதவீத பாதிப்புகள் கிராமப்புறங்களிலும் வருகின்றன. இரண்டாவது அலை 20 மாவட்டங்களில் முடிவடைந்தாலும் கூட, 20 சதவீத மாவட்டங்களில் தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஆரம்ப கட்டத்தை எட்டியது கொரோனா 3வது அலை.. இந்தியாவில் 230 வகையான வைரஸ் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Corona 3rd wave ,India ,New Delhi ,World Health Organization ,third wave of Corona ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகளின் மாணவர்...