×

ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாக செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்யும் கும்பல் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வேலூர்: வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி செல்போனுக்கு லிங்க் அனுப்பி மோசடி செய்யும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நன்மைகளும், தீமைகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆசை வார்த்தைகளை கூறி நாளுக்கு நாள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடி செய்பவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்கிறார்கள்.

அவர்கள் தங்களை ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் ஹெச்ஆர் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பல்வேறு வணிகங்கள் மற்றும் இன்புளுயன்சர்களுக்கு கூகுள் மேப்பில் மதிப்புரைகள் வழங்குவது மற்றும் கருத்துகளை பதிடுவது போன்ற செயல்பாடுகள் இருக்கலாம். ஒரு நாளைக்கு ₹450 முதல் ₹11,000 வரை பணிகளை முடிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று கூறி கவர்ந்திழுக்கிறார்கள். பின்னர் பெரும் தொகை வந்தவுடன் மோசடி செய்துவிடுகிறார்கள்.

இதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சலுகை அறிவிப்புகளை பார்த்ததும் ஆசைப்பட்டு பணத்தை பொதுமக்கள் பலர் இழந்து வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:
ஆன்லைன் ஜாப் மூலம் அதிகளவில் சம்பாதிக்கலாம் என கூறி வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் லிங்க் அனுப்பி வைக்கின்றனர். வேலை வாய்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறுவனத்தை நேரடியாக அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

முறையான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே கட்டணம் அல்லது டெபாசிட்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை. பயிற்சி அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் பணம் செலுத்துமாறு கேட்டால், அது ஒரு மோசடியாக இருக்கலாம். அதனால் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலீட்டு வாய்ப்புகளுடன் அணுகினால், வர்த்தக தளத்தை ஆராயுங்கள். இது ஒரு முறையான மற்றும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆராய வேண்டும். இதுபோன்ற மோசடிக்கு யாராவது ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தை புகாரளிக்கவும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யலாம். இணையதளத்தை மிக கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாக செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்யும் கும்பல் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!