×

ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்ய திருப்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பதாகை

திருப்பூர், செப். 27: மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பணியிடங்கள் மற்றும் கல்லூரிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரும் விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இச்சம்பவத்தை தொடர்ந்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை செவிலியர்களிடம் பாலியல் ரீதியிலான தொந்தரவு அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியானவர்களின் நடமாட்டம் இருந்தாலோ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் உள்ள காவலர்களிடம் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், மருத்துவக்கல்லூரிக்கு வரும் மருத்துவ மாணவிகள் மற்றும் செவிலியர்கள் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பணி சூழல் நோக்கி பெண்கள், சகித்துக் கொள்ளாதீர்கள் குரலை உயர்த்துங்கள் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பணியிடத்தில் துன்புறுத்தலை எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை ஆவணப்படுத்த வேண்டும். சம்பவம் நடந்த தேதி, நேரம் மற்றும் சாட்சிகள் உட்பட சம்பவங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அரசு உள் நிறுவன புகார் குழுவுக்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும். தங்களுக்கு மேல் உள்ள ஹெச்.ஆர் மற்றும் ஐசிசிக்கு உடனடியாக புகார் தெரிவிக்கலாம். Sexual Harassment Electronic Box (ஷீ-பாக்ஸ்) எனப்படும் ஆன்லைன் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். மேலும் இலவச தொலைபேசி எண்களாக குழந்தைகளுக்கு 1098, பெண்களுக்கு 181, முதியவர்களுக்கு 14567 என்ற எண்ணிலும், உள் நிறுவன புகார் குழு தொடர்பு எண்ணாக 98944 60190 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட தளமான ஷீ- பாக்ஸ் போர்ட்டல் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தவர்களை எதிர்கொள்ளும் எந்த ஒரு பெண்ணும் இந்த போர்டல் மூலமாக தங்கள் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகார வரம்பில் நடவடிக்கை எடுக்க இது அனுப்பி வைக்கப்படும்.

The post ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்ய திருப்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பதாகை appeared first on Dinakaran.

Tags : Tirupur Govt Hospital ,Tirupur ,West Bengal ,Tirupur Government Hospital ,Dinakaran ,
× RELATED ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி