சென்னை : தமிழகம் - ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லவா ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு ₹6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்ட தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லவா ஆற்றில் ஆந்திரா கட்டிவரும் தடுப்பணைகளை தமிழக பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே தமிழகம் - ஆந்திர எல்லைப் பகுதியிலிருந்து லவா ஆறு கொசஸ்தலை ஆற்றுடன் சங்கமிக்கிறது. பள்ளிப்பட்டில் இருந்து பூண்டி நீர்தேக்கத்தை சென்றடையும் கொசஸ்தலை ஆற்றின் நீர் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை அமைந்துள்ள சானா குப்பத்திலிருந்து ஆந்திர மாநிலம் எஸ்.ஆர்.புரம் வரை லவா ஆற்றின் குறுக்கே 15 இடங்களில் ரூ6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும் பணியில் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ‘தினகரன்’ இதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழக பொதுப்பணித்துறை திருத்தணி கோட்ட உதவி செயற்பொறியாளர் வேதபுரி, இளநிலை பொறியாளர்கள் வெங்கடேசுலு, கலையரசன் ஆகியோர் லவா ஆற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டிவரும் தடுப்பணைகளை நேற்று பார்வையிட்டு, தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆந்திர அரசு லவா ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் தமிழக அரசின் அனுமதியுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
