×
Saravana Stores

அலை ஓயுமா?

கொரோனா தொற்றால் உலகமே நடுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், முதல் அலையின்போது நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஊரடங்கு போட்டு, வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக மத்திய அரசு பெருமையடித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் சுனாமியாக புறப்பட்டு வந்தது இரண்டாவது அலை. ஆரம்பத்தில் இருந்தே உயிரிழப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரிக்க தொடங்கியது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை என்று அவலங்கள் அரங்கேறி இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் சடலத்தை ஆம்புலன்சில் வைத்துக்கொண்டு மயானத்தில் இறுதிச்சடங்கு நடத்த வரிசைகட்டி நிற்கிறார்கள். நாடு முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டி வரும் கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மீள்வதற்காக மீண்டும் அந்தந்த மாநில அரசுகளே ஊரடங்கு பிறப்பித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறது. ஊரடங்கால் தொற்று பாதிப்பு கொஞ்சம் குறைந்தாலும், இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. கொரோனா 2வது அலை என்பது உருமாறிய வைரசால் ஏற்பட்ட தாக்கம் என்று வைராலஜிஸ்ட்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அலை எளிதாக குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள். அப்பாடா, இதோடு விட்டதே என்று நாம் நிம்மதியடைய முடியாது. அடுத்து மிக ஆவேசத்துடன் தாக்குவதற்கு 3வது அலை தயாராக இருக்கிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சியூட்டி இருக்கிறார்கள். முதல் அலையால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டதால் 2வது அலை, 3வது அலையை எதிர்கொள்ள முடியும் என்று கருதுவது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முதல் அலையின் முடிவில், ஊரடங்கு தளர்வுக்கு பின்னர், மக்களிடம் ஏற்பட்ட அலட்சியமே 2வது அலை பரவலுக்கு காரணம். மேலும் கொரோனா தடுப்பூசி மேல் இருந்த பயத்தால் மக்கள் போட்டுக்கொள்ளாமல் தவிர்த்ததும் மற்றொரு காரணம். இப்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதால், ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் மருந்து கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வராது என்று உறுதியளிக்க முடியாவிட்டாலும், உயிரிழப்பு ஏற்படுவது மிகமிக குறைவு. எனவே, தடுப்பூசி மருந்து அதிகளவில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளின் நிலைகளை பொருத்துதான் கொரோனாவை நாடு எதிர்கொள்ள முடியும். மேலும் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், எச்சரிக்கையுடன் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடித்து மக்களே தங்களை சுயமாக  பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் எத்தனை அலைகள் வந்தாலும் உறுதியாக எதிர்கொள்ள முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது….

The post அலை ஓயுமா? appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஒவ்வொரு மனிதருக்கும் சகிப்புத்தன்மை மிக மிக அவசியம் : ஜி.கே.மணி பதிவு