×

அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க 7.57 லட்சம் மரக்கன்று

அரியலூர் ஜூன் 6: அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை, திருச்சி வன மண்டலம், அரியலூர் வனக் கோட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று மரக்கன்றுகளை நட்டார். தமிழக அரசு வனத்துறையின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், பசுமை பரப்புகளை அதிகரித்தல், காடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரியலூர் வனக் கோட்டம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் நேற்று மரக்கன்றுகளை நட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டிற்கு 7,57,000 கன்றுகள் நடவுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரியலூர் வனக்கோட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக 4,28,034 (போக்கு செடிகள் உட்பட) மூன்று நாற்றங்கள்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டு நடவு பணிகள் காப்பு காடுகள், அரசு பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள் வளாகம், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் வளாகம், தொழிற்சாலைகள் வளாகம், மருத்துவமனை வளாகங்கள், விவசாயிகள் நிலங்கள் போன்ற பல்வேறு இடங்களில் வனத்துறை மூலம் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்படி நபார்டு திட்டத்தின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் 7,500 நடவு எண்ணிக்கையும், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம், காலநிலை மாற்றம் திட்டத்தின் கீழ் 83,500 நடவு எண்ணிக்கையும், பசுமை தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டில் 3,02,000 நடவு எண்ணிக்கையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 50,000 நடவு எண்ணிக்கையும், வேளாண்துறையின் சார்பில் 1,63,000 நடவு எண்ணிக்கையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 1,51,000 நடவு எண்ணிக்கையும், என ஆக மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் 7,57,000 மரக்கன்றுகள் நடவுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் வனக்கோட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது. இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் 25 எண்ணிக்கை தனியார் நாற்றங்கால்களில் 4,50,000 நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இதனை முறையாக பயன்படுத்தி அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து அரியலூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவர்கள் ரமேஷ், கண்மணி வனத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க 7.57 லட்சம் மரக்கன்று appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Tamil Nadu Forest Department ,Trichy Forest Division ,Ariyalur Forest ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...