×

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

 

விருதுநகர், டிச. 10: விருதுநகர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த தம்பதியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(32). அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினரான மாரிச்சாமி என்பவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்கிறார். இவர்களிடம், மிளகாய்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, தான் கோவையில் ஆசிரியையாக வேலை செய்வதாகவும், தனது கணவர் அன்புசிவா சென்னையில் பேராசிரியாகவும் துறைத் தலைவராகவும் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் இருவரும் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி, பாலமுருகன் மற்றும் மாரிச்சாமி ஆகியோர் ரூ.20 லட்சத்தை அன்புசிவா கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால், அவர் சொன்னபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. எனவே, பணத்தை இருவரும் திருப்பிக் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாலமுருகன், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து, வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பாக்கியலட்சுமி மற்றும் அன்புசிவாவைத் தேடி வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...