×

அரசு போக்குவரத்து கழகத்தில் 2.30 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணம்

சிவகங்கை, ஆக.18: சிவகங்கை மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் கட்டணமில்லா பயணங்கள் செய்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட 5முக்கிய திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டார். அதில் டவுன் பஸ்களில் பெண்கள் பயணிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதும் ஒரு முக்கியமான திட்டமாகும். இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. அனைத்து அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலம் சார்பில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பணிமனைகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 பணி மனைகளில் 159ரூட் பஸ்கள் உள்பட சுமார் 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டவுன் பஸ்களில் பெண்கள் டிக்கெட் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். 2021ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் டவுன் பஸ்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்கள் டிக்கெட் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பைவிட இந்த இரண்டு ஆண்டு காலத்தில் டவுன் பஸ்களில் பெண்களே கூடுதலாக பயணித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் டவுன் பஸ்களில் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 30ஆயிரம் பயணங்கள் டிக்கெட் கட்டணமின்றி செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த மாதம் வரை சுமார் 2 கோடியே 30லட்சம் பயணங்கள் இம்மாவட்டத்தில் நடந்துள்ளது. 4ஆயிரம் திருநங்கைகள் மற்றும் 1லட்சத்து 30ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், 3ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் பயணங்கள் செய்துள்ளனர். போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் முன்பைவிட தற்போது பெண்கள் அதிகமாக டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர்.

ஒவ்வொரு பஸ்சிலும் சராசரியாக 60 முதல் 70சதவீதம் பெண்களே பயணிக்கின்றனர். கிராமங்களுக்கு சென்று வரும் டவுன் பஸ்களிலேயே இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகமாகும். பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணமில்லை என அறிவித்திருப்பதால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி செல்பவர்கள், கிராமப் பெண்கள், கிராமங்களில் இருந்து நர்ப்புறங்களுக்கு வந்து காய்கறிகள், பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முழுமையாக பயன்பெற்று வருகின்றனர் என்றார்.

The post அரசு போக்குவரத்து கழகத்தில் 2.30 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணம் appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation ,Sivagangai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை...