அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக லே செயலர் கிப்ட்சன் பேட்டி

தூத்துக்குடி, ஏப். 28:அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திருமண்டல பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டு ஊதியம் கிடைக்காமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளதாக திருமண்டல லே செயலர் கிப்ட்சன் தெரிவித்தார். இதுகுறித்து தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர்பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறியதாவது, சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கிறிஸ்தவ மதத்திலுள்ள ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

இதற்காக பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம் சார்பிலும் நிர்வாகிகள் நேரில் சென்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து திருமண்டலம் சார்பாக சில கோரிக்கைகளை மனுவாக அவரிடம் அளித்துள்ளோம். அதில் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகளான உயர்கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் சிறப்பு இடஒதுக்கீடு திட்டம், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மேலும் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016ம் ஆண்டு முதல் பணி அமர்த்தப்பட்டு பணியாற்றி வரும் 87 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும். வைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாயர்புரத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கு திருமண்டலம் சார்பில் இடம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே அந்த புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ் பணியாற்றிய டாக்டர் ஜி.யு.போப் பெயர் சூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் உறுதி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

திருமண்டலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நாங்கள் பொறுப்பேற்ற பிறகு முந்தைய நிர்வாகத்தில் நடந்த பல தவறுகளை சரி செய்து, திருமண்டலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம். இந்தாண்டு திருமண்டல அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 20 சேகரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதால் புதிதாக 20 குருவானவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.பேட்டியின்போது திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஜான்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக லே செயலர் கிப்ட்சன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: