×

2 மாதத்துக்கு பின் எல்லையில் பாக். அத்துமீறி துப்பாக்கி சூடு

புதுடெல்லி: இரண்டு மாதங்களுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகின்றது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவதும் அதன் காரணமாக பதற்றம் ஏற்படுவதும் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் எல்லையில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதனையடுத்து 2003ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றுவது என்று இருநாடுகளும் முடிவு செய்து பிப்ரவரி 24ம் தேதி கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக எல்லையில் துப்பாக்கி சூடு சம்பவங்கள், எல்லையோர கிராமங்களில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் காலை 6 மணிக்கு பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

Tags : Bach at the border after 2 months. Excessive firing
× RELATED 121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்