×

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி: புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என்று மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்தால் அவர்களுககு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அந்த உதவி தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் உயர்கல்வி திட்டத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்திடக்கூடிய உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இப்போதே, உங்கள் வங்கி கணக்கில், உங்களுக்கான கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. வந்திருக்கிறதா, இல்லையா சொல்லுங்கள். அதற்கான குறுஞ்செய்தியை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1000 வழங்கக்கூடிய மகத்தான திட்டம் இந்த திட்டம். 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. எனது வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. அதை நினைக்கத்தக்க வகையில் மிக முக்கியமான நாளாக இது அமைந்திருக்கிறது. உயர்ந்த சாதியை சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும், அதுவும் ஆண்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்று இருந்த காலம் அது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி தான்.அந்த சமூகநீதியை, அரசியல்ரீதியாக காப்பாற்றியவர் பெரியார். ஆட்சி ரீதியாக அதை காத்தவர்கள் காமராஜர், அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர். அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது. இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான். அந்த திராவிட இயக்கத்தினுடைய பெண்ணுரிமை போராட்டங்களால் விளைந்த பயன். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், பெண்கள் படித்தே ஆக வேண்டும் என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கியது. அந்த வரிசையில் கல்வி – சமூகநீதி – பெண்ணுரிமை திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். பள்ளியில் படிக்க வரும் மகளிருக்கு, கல்லூரிக்கு வருவதற்கு தடையும், தயக்கமும் இருக்கிறது. அந்த தடையை உடைப்பதற்குத்தான் இந்த புதுமைப்பெண் திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். ‘படிக்க வைக்க காசு இல்லையே’ என்ற கலக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது.  ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பதை அந்த மாணவியர்க்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவதை அரசு கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைகிறார்கள்.  இதன்மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நமது ஆட்சியினுடைய மையக் கருத்து, அனைவருக்குமான வளர்ச்சியின் உள்ளடக்கம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதே. அதனை மனதில் வைத்துத்தான் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாதிரி பள்ளிகளும், தகைசால் பள்ளிகளும் இதே நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில்தான் ஸ்மார்ட் வகுப்புகள் இருக்குமா? அரசு பள்ளிகளிலும் நாம் உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் இதனை நாம் இன்றைக்கு உருவாக்கி இருக்கிறோம். பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒருமாதிரி கல்வி, அது இல்லாதவர்களுக்கு இன்னொரு மாதிரி கல்வி அல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரி கல்விதான் நம்முடைய நோக்கம். கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையானது மகத்தான பல சாதனைகளை செய்துள்ளது. முதல்கட்டமாக ரூ.171 கோடி மதிப்பீட்டில், 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளியினுடைய கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்துத் திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அதாவது மாணவர்களின் பல்துறை திறன் வெளிக்கொண்டு வரப்படும். இவை அனைத்து மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில், ரூ.150 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும். பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.  நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் தந்தையின் இடத்தில் இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களை வளர்த்தெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அரசும் இருக்கிறது. புதுமைப்பெண் போன்ற ஏராளமான திட்டங்களை கொண்டு வருவோம் என்று பேசினார். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், பாடநூல் கழக தலைவர் லியோனி, தலைமை செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாம்பு கல்லோலிகர், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* டெல்லி முதல்வர் ஒரு போராளிஅரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் மட்டுமல்ல, அவர் ஒரு போராளி. ஐஆர்எஸ் வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய பொதுவாழ்வில்  இறங்கினார். தனது கடின உழைப்பால் டெல்லி முதல்வர் பதவியேற்றுள்ளார்.  சமீபத்தில் பஞ்சாபிலும் தனது கட்சியை வெற்றிபெற செய்தார். எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். நாட்டில் உள்ள அனைவராலும்  உன்னிப்பாக கவனிக்கப்படுகிறார். அவர் இன்று தமிழகத்தில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லி அரசு பள்ளிகளை போல தமிழகத்திலும் உருவாக்க திட்டமிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடக்க விழாவிற்கு விருந்தினராக வருமாறு கேட்டுக் கொண்டோம். எனது அழைப்பை ஏற்று, அவர் வந்துள்ளார். உங்கள் அனைவரின் சார்பாகவும் அவரை வரவேற்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.* ஒரே உத்தரவில் கல்லூரிக்கு ரூ.25 கோடிசென்னையில் 76 ஆண்டுகளை கடந்து கல்வி தொண்டாற்றி வரக்கூடிய, உங்கள் பாரதி மகளிர் கல்லூரியில் ஒரு சில கட்டிடங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில்  இருப்பது என்னுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. உங்கள் தேவையினை உணர்ந்து, உடனே, ரூ.25 கோடி மதிப்பீட்டில், 33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் மற்றும் 3 ஆசிரியர் அறைகள் கொண்ட, தரைத்தளத்துடன் கூடிய 3 அடுக்கு கட்டிடம் கட்ட நான் உத்தரவிட்டிருக்கிறேன். விரைவில் அந்த பணிகள்  முடிந்து கட்டிடம் நிச்சயமாக உங்களுடைய பயன்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் கூறினார்….

The post அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி: புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Pudumaiben ,Dinakaran ,
× RELATED அரசின் நலத்திட்டங்கள் குறித்து...