×

அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தேர்வு கட்டண உயர்வை கைவிட கோரிக்கை திருவண்ணாமலையில் வகுப்புகளை புறக்கணித்து

திருவண்ணாமலை, அக்.11: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைந்ததாகும். இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர்வு கட்டணம் மட்டுமின்றி, தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம், மதிப்பெண் பட்டியல் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாணவர்கள் முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, போலீசார் மாணவர்களை சமரசப்படுத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனாலும், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

The post அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தேர்வு கட்டண உயர்வை கைவிட கோரிக்கை திருவண்ணாமலையில் வகுப்புகளை புறக்கணித்து appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Government Arts College ,Thiruvannamalai… ,Tiruvannamalai ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...