×

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக உயர்வு எதிரொலி; தமிழகம் முழுவதும் இன்று 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுகிறார்கள்: அரசின் நிதிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த அதிமுக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் அறிவித்தது. இதையடுத்து, மீண்டும் 2021ம் ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59ல் இருந்து 60ஆக உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது.இதுபோன்ற அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்திய அதிமுக அரசால், லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு பணி கனவு தகர்க்கப்பட்டுள்ளது என்றும், இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற அறிவிப்பு, அரசு ஊழியர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருந்தாலும், அரசு பணிக்காக இரவு, பகலாக தயாராகி கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பால் அரசு பணிக்காக தயாராக முன்வரும் இளைஞர்கள் கனவு கேள்விகுறியாகி உள்ளதாக தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம் அப்போதே கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 2020ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதியுடன் ஓய்வுபெறும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு மொத்தமாக ஓய்வுபெற உள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். மேலும், வரும் சில மாதங்களில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் வரை உயரும் நிலை உள்ளது. ஒரே மாதத்தில் அதிகளவு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறுவதால் அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை தலைவர் சங்கர் கூறும்போது,  “தமிழகத்தில் 2020 மற்றும் 2021ம் ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 58ல் இருந்து 59ஆகவும், அடுத்து 59ல் இருந்து 60ஆகவும் உயர்த்தி அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இதனால் தமிழகத்தில் 2020ம் ஆண்டு ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் இன்று (மே 31ம் தேதி) மொத்தமாக சுமார் 6 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள். காரணம், கடந்த காலங்களில் தமிழகத்தில் பள்ளிகளில் சேர வேண்டும் என்றால் 3 வயது முடிந்திருக்க வேண்டும். அதனால் பலரும், மே மாதத்துக்கு முன் அல்லது பின் பிறந்தவர்கள் கூட மே மாதத்தில் ஏதாவது ஒரு தேதியை பிறந்த நாளாக பள்ளிக்கூடத்தில் பதிவு செய்திருப்பார்கள். இதனால் அவர்கள் ஓய்வுபெறும் மாதமும் மே இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் அதிளவில் இருக்கும். அதன்படி, இன்று சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 46 பேர் ஓய்வு பெறுகிறார்கள். கூட்டுறவு துறையில் 56,  மருத்துவ துறையில் 115, பொது சுகாதாரத்துறையில் 87 பேர், வேளாண்மை துறையில் 34 பேர், கால்நடை பராமரிப்பு துறையில் 15 பேர் என சுமார் 7 ஆயிரம் பேர் வரை இன்று தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் டி பிரிவு ஊழியர்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே ஓய்வு பெறுவதற்கான உத்தரவை வழங்கி விடுவார்கள். இதுதவிர கல்வி, போலீஸ் துறையிலும் ஏராளமானோர் இன்று ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அதன்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் வரை ஓய்வுபெற உள்ளனர்” என்றார்….

The post அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60ஆக உயர்வு எதிரொலி; தமிழகம் முழுவதும் இன்று 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுகிறார்கள்: அரசின் நிதிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...