×

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தமாட்டோம்: கோயம்பேடு வியாபாரிகள் அதிகாரிகளிடம் உறுதி

அண்ணாநகர்: இனிமேல் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தமாட்டோம் என்று கோயம்பேடு வியாபாரிகள் உறுதிமொழி கடிதம் கொடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டுகளில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அதற்கு பதிலாக துணிப் பைகளில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி உத்தரவிட்டார். அத்துடன் தினமும் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும் கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனையும் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடைகளுக்கு சீல் வைத்து கடையின் உரிமத்தை 3 மாதத்துக்கு ரத்து செய்தனர். இதன்காரணமாக பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்துவிட்டு தற்போது  துணிப் பைகளில் பூக்களை வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு சீல் வைத்து அங்கிருந்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இந்த நிலையில், நேற்று வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் அங்காடி அலுவலர் சாந்தியை சந்தித்து பேசினர். அப்போது வியாபாரிகள், ‘‘இனிமேல் காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்ய மாட்டோம். இவற்றை மீறி பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால் எங்களது கடைகளை சீல் வைத்துகொள்ளலாம்’’ என்று கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதன்பின்னர் சீல் வைக்கப்பட்ட 8 கடைகளில் சீல் அகற்றப்பட்டது.இதுபற்றி அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து துணி பைகளில் வியாபாரம் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றோம். பூ மார்க்கெட்டில் முழுவதுமாக பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த கடைகளை சீல் வைத்து அபராதம் விதித்துள்ளோம். காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்ய மாட்டோம் என வியாபாரிகள் வாக்குறுதி கடிதம் எழுதி கொடுத்துள்ளதால் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால் கடைகளை சீல் வைத்து வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….

The post அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தமாட்டோம்: கோயம்பேடு வியாபாரிகள் அதிகாரிகளிடம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி...