×

காய்கறி கழிவுகளில் இருந்து மின்உற்பத்தி திட்டத்தால் ஆற்காட்டில் ஆண்டுக்கு ₹9 லட்சம் மின்கட்டணம் மிச்சம்

வேலூர் : தமிழகத்தில்  முடங்கும் அபாயத்தில் உள்ள காய்கறி கழிவில் இருந்து மின்உற்பத்தி செய்யும்  திட்டத்தை தீவிரப்படுத்தி மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த தமிழகஅரசு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். ‘சுற்றுச்சூழல் மாசு’ பூமியின் நிலைத்தன்மைக்கு  பேராபத்தாக உருவெடுத்து வருகிறது. அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு  பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்கித்தரும் கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது.  நாளுக்குநாள் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசு பூமியை வாழத்தகுதியற்ற இடமாக  மாற்றி வருகிறது. இன்றைய அவசர கால வாழ்க்கை முறையில் மனிதன் தன் அன்றாட  வாழ்வில் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், ஆடைகள், மின்சாரம் மற்றும்  மின்னணு உபயோக பொருட்கள் ஆகியவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

alignment=

இந்நிலையில்,  சுற்றுச்சூழல் மாசிற்கு முக்கிய காரணிகளாக விளங்கும் மக்கா கழிவுகள்  குறித்து சூற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழும அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மக்கா கழிவுகளான பிளாஸ்டிக்,  தெர்மாகோல் கழிவுகள், மக்கும் இறைச்சிக்கழிவுகள், காய்கறி, உணவுக்கழிவுகளே  சுற்றுச்சூழல் மாசிற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவற்றை  கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது. அதில், மக்கா பிளாஸ்டிக், தெர்மாகோல் பயன்பாட்டை  ஒழிப்பது, மீதமாகும் உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து  பயன்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி,  இந்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்  குழுமம் ஆகியவை இணைந்து பையோ-மீத்தனைசேஷன் திட்டத்தை செயல்படுத்தின.  தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி  செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. மாநகராட்சி மற்றும்  நகராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் படிப்படியாக  விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்தது.

நவீன  பையோ-மீத்தனைசேஷன் தொழில்நுட்பத்தில் காய்கறி, உணவு கழிவுகளில் இருந்து  உற்பத்தியாகும் மின்சாரம் தெருக்கள், பஸ் நிலையங்கள், பூங்காக்களில்  மின்விளக்குகள் எரிய பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஆற்காடு நகராட்சியில் இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆற்காடு நகராட்சியில் ஒரு  நாளைக்கு 25  மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதில் சுமார் 3 டன்  காய்கறிகள், இறைச்சி,  கழிவுகள், உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம்  தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

தன்னிறைவு திட்டத்தின் கீழ் மக்கள்  பங்களிப்பு ₹23.10 லட்சம், அரசின் பங்களிப்பு  ₹21.90 லட்சம் என ₹45 லட்சம்  மதிப்பீட்டில்  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  புனேயை   சேர்ந்த மெயில்ஹெம் இன்ஜினியர்ஸ் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தும்  பொறுப்பை ஏற்றது. அதன்படி அமைக்கப்பட்ட பயோ கேஸ் பிளாண்ட் மூலமாக ஒரு  நாளைக்கு  265 முதல் 285 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனைச்   சுற்றியுள்ள 3 அல்லது 4 வார்டுகளில் உள்ள தெருவிளக்குகள் எரியவைக்க இந்த   மின்சாரத்தை பயன்படுத்தலாம். கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் மறைந்த  முதல்வர் ெஜயலலிதா காணொலி  காட்சி மூலம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ்  தற்போது தினமும் 265 யூனிட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்பட்டு 156 தெரு  மின்விளக்குகள் ஒளிர வைக்கப்படுகின்றன. இதுவரை சுமார் 4.98 லட்சம் யூனிட்  மின்சாரம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆற்காடு நகராட்சிக்கு  ஆண்டுக்கு ₹9  லட்சம் மின்கட்டணம் சேமிக்கப்படுகிறது. இதுதவிர இங்கு   உற்பத்தியாகும் பயோ கேஸை சிலிண்டரில் அடைத்து எரிபொருளாக  பயன்படுத்துவதற்கான  திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

ஆற்காட்டை தொடர்ந்து சென்னை மாநகராட்சி  கோயம்பேடு மார்க்கெட்டில் சேகரிக்கப்படும் 30 டன் காய்கறி கழிவில் இருந்து  நாளொன்றுக்கு 2000 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. பின்னர்,  இத்திட்டம் பூந்தமல்லி, ஆவடி, மேட்டூர், நாகர்கோவில் நகரங்களுக்கும்  விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், காய்கறி கழிவு மின்உற்பத்தி  நிலையம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்த நிலையில் பராமரிப்பு பணி  குறைபாடு, போதியளவில் ஆட்கள் நியமிக்காதது போன்ற காரணங்களால்  பையோ-மீத்தனைசேஷன் மையம் பல நகரங்களில் முடங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் மூலம் அரசின் காய்கறி கழிவுகள் மூலம் மின்உற்பத்தி செய்யப்படும் என்ற  அறிவிப்பு, வெறும் அறிவிப்பு என்ற நிலைக்கு தள்ளப்படுமா? என்ற அச்சம்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘நல்ல நோக்கத்துடன்  செயல்படுத்தப்படும் இத்திட்டம் முடங்குவதை தவிர்க்க தேவையான தொழில்நுட்ப  உபகரணங்கள், பராமரிப்பு வசதிகள், கட்டமைப்புகள், பணியாளர்கள் என அனைத்து  வசதிகளையும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்குவதுடன், இத்திட்டத்தை மாநிலம்  முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும்’ என்றனர்.

இப்போதைக்கு ஆற்காடு, வேலூர் மட்டும்தான்

நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயகுமாரிடம் கேட்டபோது, ‘ஆற்காடு தவிர்த்து தற்போது வேலூர் மாநகராட்சியில் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு, எரிவாயு தகனமேடையில் சடலம் எரிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.  மேலும் அதில் இருந்து வெளியேறும் திரவ கழிவும் விவசாயிகளுக்கு குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் எரு போன்று, திரவ உரமாக வழங்கப்படும். இதுதவிர சின்னஅல்லாபுரத்தில் அதேபோன்று கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கப்படும்.

இந்த எரிவாயு அங்குள்ள சமுதாய சமையற்கூடத்துக்கு வழங்கப்படும். அங்கு சமையல் கேஸ் இணைப்பு இல்லாதவர்கள் சமைத்துக் கொள்ளலாம். பிற நகராட்சிகளில் காய்கறி கழிவுகளை என்ன செய்வது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை’ என்றார்.  சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிதாசனிடம் கேட்டபோது, ‘காய்கறி கழிவு பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள்தான் தீர்வு காண வேண்டும். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதேநேரத்தில் நீங்கள் குறிப்பிடும் விஷயம் நல்ல விஷயம்தான். அதை எல்லா மாநகராட்சி, நகராட்சி என அனைவரும் பின்பற்றினால் திடக்கழிவு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்’ என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : vegetable waste,arcod, electricty production,Environmental pollution
× RELATED தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன...