×

அதிமுக மாஜி அமைச்சர், பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் அபகரிப்பு குறித்து விசாரணை

* அரசுக்கு ரூ.90 கோடி நிதி இழப்பு* லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார்சென்னை: அதிமுக மாஜி அமைச்சர், பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3  ஏக்கர் அரசாங்க நிலம் கையாடல்  செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.90 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை அதிமுக மாஜி அமைச்சர் ஒருவரின் பினாமி பெயருக்கு விற்பனை செய்யப்பட்டது. அதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதும், அதில் பதிவுத்துறை அதிகாரிகள் பலர் சிக்கியிருப்பது குறித்தும் தினகரனில் செய்தி வெளியானது. ஆனால் அதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் விற்பனை நடந்துள்ளது என்று அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், வீட்டு வசதி வாரியத்தின் அனுமதி இல்லாமல், அந்த துறையின் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை முழுமையாக மறைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் இந்த மோசடியை மறைக்க பெரிய அளவில் மாஜி அமைச்சரின் சகோதரர் சென்னையில் இருந்தபடி சில அதிகாரிகளை சந்தித்து தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமியிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் வக்கீல்கள் புகார் செய்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:வீட்டு வசதி வாரியத்திற்கு, அம்பத்தூர் தாலுகா முகப்பேர் கிராமம் சர்வே எண் 604 மற்றும் 605ல் நிலங்கள் உள்ளன. அரசியல் பின்னணி கொண்ட சிலர் இதை அபகரிக்க முயன்றனர். இதற்காக . மோசடி விற்பனைப் பத்திரங்களை உருவாக்கி  கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். அந்த நிலம் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது என்பதால் அதனை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்துவிட்டார். உடனே இந்த மோசடி நபர்கள்  வேளச்சேரி சார்பதிவாளரை அணுகி, மேற்கூறிய நிலங்களையும் பதிவு செய்ய  கூறி சதி செய்தனர். இதற்காக இரண்டு  மோசடி விற்பனை பத்திரங்கள் தயாரிக்கப்பட்டன. மடிப்பாக்கம் புதிய குபேரா நகர் 3வது தெரு பிளாட் எண் 2, பிளாட் எண் 23 பி, அங்கீகரிக்கப்பட்ட திட்டமிடல் அனுமதி எண் 368/99 கடிதம் எண் 5920/99 தேதி 6.12.99, சர்வே எண் 188/5 ல் அடங்கியது, 1620 சதுர அடியில் 202.5 சதுர அடி அளவிலான பிரிக்கப்படாத பங்கு நிலப்பரப்பின் பிளாட் மற்றும் 386 சதுர அடி கட்டிடப் பகுதி  கொண்டது. முதல் மாடியில் பிளாட் எண் 2 கொண்டது. அதேபோல, முகப்பேர் கிராமம், அம்பத்தூர் தாலுகா சர்வே எண் 605ல் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் அடங்கிய பாகத்தை கொண்டிருந்தது. விற்பனைப் பத்திரமானது எஸ்.கலைச்செல்வி மற்றும் 24 பேர் சேர்ந்து கே.வி.ஜெயராமன், லோகநாதன் கவுண்டர் ஆகியோருக்கு சாதகமாக நிறைவேற்றப்பட்டது.  பின்னர் வேளச்சேரி சார்பதிவாளர் அந்த ஆவணங்களை நிலுவையில் வைத்த பின்னர்  மேற்குறிய சொத்தின் வழிகாட்டுதல் மதிப்பைக் கோருவதற்காக  கொன்னூர் எஸ்ஆர்ஓ க்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 22.8.2016 தேதியிட்ட தனது பதில் கடிதத்தில் கொன்னூர் சார்பதிவாளர், அந்த நிலங்களின் மதிப்பு சதுர அடிக்கு ரூ.6500 என்று கூறியதுடன், அந்த நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அந்த சொத்துக்களின் மீது சில வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கொன்னூர் எஸ்ஆர்ஓ விடமிருந்து பதிலைப் பெற்ற பின்னர் வேளச்சேரி சார்பதிவாளர் அரசாங்க பிளீடர் எம்.கே.சுப்பிரமணியன் விளக்கம் கோரினார். அரசாங்க பிளீடர் இடம் இருந்து ஒரு கருத்தைப்  பெற்ற பின்னர் நிலுவை ஆவணங்களை பதிவு செய்துள்ளனர்.இந்த பதிவில் பின்வரும் மீறல்கள் நடந்துள்ளன: முகப்பேர் கிராமத்தில் சர்வே எண் 604 மற்றும் 605 ல் உள்ள சொத்துக்கள் தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் உள்ளன. மேலும் கொன்னூர் எஸ்ஆர்ஓ தனது பதிலில் கூறியுள்ளபடி பட்டாவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெயரிலேயே உள்ளது. சார்பதிவாளர் அதனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தெளிவு படுத்திக் கொள்ளவில்லை. இதன்மூலம் பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கையை மீறியுள்ளார்.  இதன் மூலம் அரசாங்க நிலத்தை அபகரிக்க தௌிவான சதி நடந்துள்ளதுதெரியும். இறப்பு மற்றும் சட்டவாரிசு சான்றிதழ், உரிமைப் பத்திரங்களை அளிக்கவில்லை. அவை போலியானவை.  மேலும், சொத்தின் வழிகாட்டுதலின் மதிப்பு சதுர அடிக்கு ரூ.6500. ஆனால் அது சென்னை முத்திரைகளுடன் சதுரஅடிக்கு ரூ.1605க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலவும் உண்மையான சந்தை மதிப்பு சதுர அடிக்கு ரூ. 10,000 ஆகும். இதன் மூலம் அரசு கருவூவலத்திற்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேற்குறிய குற்றம் சார்ந்த காரணிகளால் சில அரசியல்வாதிகள் மற்றும் பதிவுத்துறை மற்றும் வருவாய் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் உதவியுடன் சில நேர்மையற்ற சமூக விரோத சக்திகளால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் அரசாங்க நிலம் கையாடல்  செய்யப்படுவதில் மிகப் பெரிய சதி உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே தயவு செய்து தணிக்கைக்கு உத்தரவிடுமாறும், குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவர முழுமையான விசாரணை நடத்த, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளனர்.  இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் பத்திரப்பதிவுத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post அதிமுக மாஜி அமைச்சர், பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் அபகரிப்பு குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Housing Board ,Registration Department ,Revenue ,Revenue Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நில...