×

அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவனம் ₹50 கோடி மோசடி: பணத்தை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருவள்ளூர், அக். 17: அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவனம் ஒன்று ₹50 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர். சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கி வரும் டிரேட்இசி என்ற நிதி மற்றும் பல்நோக்கு நிறுவனத்தின் கிளை திருவள்ளூர் மாவட்ட தலைநகர் திருவள்ளூர் ராஜாஜிபுரம் கணபதி நகரில் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்திற்கு காரைக்குடியைச் சேர்ந்த தற்போது சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் பொன் சரவணன் என்பவர் நிறுவனத்தின் தலைவராகவும், தூத்துக்குடியைச் சேர்ந்த தற்போது சென்னை துரைப்பாக்கத்தில் வசிக்கும் சுபாஷ் என்பவர் இணை நிறுவனராகவும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் திருவள்ளூர் கிளைக்கு தலைவராகவும் உள்ளனர்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். மேலும், தாங்கள் கட்டுமானம் மற்றும் பல்வேறு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால் வட்டி மேலும் கூடும் என்று ஆசை வார்த்தை கூறி ஏஜென்டுகள் மூலம் ஆட்களை நியமித்து முதலீட்டை ஈர்க்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதைக் கண்ட கப்பாங் கூட்டுரோடு, பேரம்பாக்கம், உரியூர், திருவள்ளூர், தக்கோலம், நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஏஜென்டுகள் மூலம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய் முதல் ₹10 லட்சம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 2, 3 மாதம் வட்டிப் பணத்தை ஏஜெண்டுகள் மூலம் அனுப்பி உள்ளனர். அதனைத் தொடர்ந்து 3 மாதம் கழித்து வட்டி தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏஜென்டுகளை வற்புறுத்தியுள்ளனர். ஏஜென்டுகள் திருவள்ளூர் நிர்வாகி லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் பொன் சரவணன் மற்றும் சுபாஷ் ஆகியோரிடம் கேட்ட போது கூடிய விரைவில் கொடுத்து விடுவோம். பணம் கைக்கு வரவில்லை என சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றி வந்துள்ளனர். கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் முதலீடு செய்திருப்பதால் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டதற்கு, பணம் கொடுக்கும் போது வாங்கிக்கொள்.

இல்லையென்றால் பணம் கொடுக்க நாங்கள் இருப்போம். வாங்குவதற்கு நீங்கள் இருக்க மாட்டீர்கள் என பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். இதில் பெண்கள் பேசும் போது ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், பணத்தை கேட்டு இன்னொரு முறை வந்தால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என நிர்வாகிகள் பொன் சரவணன், சுபாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய 3 பேரும் பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், பணத்தை வாங்கி கொடுத்த ஏஜென்டுகள் நேற்று திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். தமிழ்நாடு முழுவதும் ₹50 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பதாகவும், இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட நபர்கள் ₹9 கோடி வரை பணத்தை இழந்திருப்பதாகவும் தெரிகிறது. பணத்தை மோசடி செய்த நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தருமாறும் புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவனம் ₹50 கோடி மோசடி: பணத்தை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,SP ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ...