×

அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

திருவாடானை,நவ.29: திருவாடானை அருகே செங்காலன்வயல் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவுடன் கூடிய முன் பருவக்கல்வி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு செயல்பட்டு வந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கி அப்புறப்படுத்தி விட்டனர்.

அதன் பிறகு கடந்த ஓராண்டாக இந்த அங்கன்வாடி மையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதனால் தற்சமயம் அங்கன்வாடி மையம் செயல்படும் அரசு பள்ளி கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி நெருக்கடியான சூழல் உள்ளதால் அங்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்பட்டு வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு தற்சமயம் காலியாக உள்ள இடத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நவ.1ம் தேதி செய்தி வெளியானது. இதனையடுத்து தினகரன் செய்தி எதிரொலியால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 

The post அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Thiruvadanai ,Chengalanvyal ,Dinakaran ,
× RELATED மானூர் அருகே அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு