புதுடெல்லி : தமிழக சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கட்சியின் பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட உட்பூசல், கருத்து வேறுபாடு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சியில்பிளவு ஏற்பட்டு, அவர் தலைமையில் ஓர் அணி உருவானது.
இவருக்கு முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறயில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.
இதையடுத்து, பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் பேரவைத் தலைவர் தனபாலிடம் வலியுறுத்தி பேசினார். ஆனால், பேரவைத் தலைவர் அதை ஏற்கவில்லை.. இதையடுத்து, நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில், மா.பா. பாண்டியராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவானது நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கன்விலேக்கர், தீபக் மிஸ்ரா மற்றும் சதானகவுடா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விசாரணையின் போது ஓபிஎஸ் அணி சார்பில் கூறுகையில் அதிமுகவில் இரண்டு அணிகளாக இதுவரை இருந்து வந்த நாங்கள் தற்போது சமரசத்திற்கு உண்டான பேச்சு வார்த்தகளை நடத்தி வருகின்றோம். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விசாரணையை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் ஜூலை மாத முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பதாக கூறி உத்தரவிட்டுள்ளார்.
Copyright © 2016
All rights reserved to Kal Publications
Design, Development and Maintenance by Web team